தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, December 11, 2014

கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்

கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?
கணினி யுகத்தில், நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத சில நவீன கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ட்ரன்க் கால் வசதி மூலம் நீண்ட தொலைவில் இருந்த உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது அந்த காலம். ஸ்கைப் வசதி மூலம் கடல் கடந்து வாழும் உறவினர்களை நேரில் பார்த்தபடி பேசுவது இந்த காலம். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொலைவு ஏற்படுத்தும் தடைகளைக் குறைத்ததுடன் , மனிதர்கள் உலக அளவில் தொடர்புகள் வைத்துக்கொள்ளவும் வழி வகுத்துள்ளன.
ஆனால் அசுர வேகத்தில் கடந்த இரு தசாப்தங்களில் வளர்ந்த கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பம் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் சிந்திக்கத்தக்கவை.
குறிப்பாக இன்றைய சிறார்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் பாரிய அளவிலானவை.
கோடைகால விடுமுறை நாட்களில் திறந்த வெளியில் குழந்தைகள் பந்து விளையாடும் காலங்கள் மாறி தற்போது கணினியின் மோகத்தில் குழந்தைகள் ஆட்பட்டிருக்கிறார்கள்.
கணினி, தொலைபேசி போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் குழந்தைகள் , இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். சில சமயம் அந்த கண்டுபிடிப்புகள் மனிதர்களை தங்களின் அடிமைகளாக்கி விடுகின்றன. நவீன யுகத்தில், பதின்பருவ இளைஞர்கள், உடன் வாழும் குடும்பத்தினரிடம் நேரம் செலவிடுவதை குறைத்து, தொழில்நுட்பத்துடனே அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனை என்றும் கூறுகிறார் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாயார் புவனா.
இளைஞர்கள்தான் அளவிற்கு மீறி, இரவு பகல் என்று பார்க்காமல் தொழில் நுட்பத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது ஒரு மருத்துவ ரீதியான பிரச்சனையென்று பெங்களூருவில் இருக்கும் தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க ‘ஷட் கிளினிக்’ என்ற ‘தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உதவும் சேவையை இந்த கழகம் சமீபத்தில் துவங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுவே என்பது குறிப்பிடதக்கது.
இந்த சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் மூத்த மருத்துவருமான டாக்டர் மனோஜ் ஷர்மா, அந்த மருத்துவமைக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 13லிருந்து 19வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று கூறுகிறார்.
தொழில் நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தும் ஒருவர் அதற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை அவரது எந்த நடவடிக்கைகள் மூலம் கண்டறியமுடியும் என்றும், அவ்வாறு கண்டறியப்பட்டவர்களுக்கு எந்த விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று கேட்டதற்கு பதிலளித்த டாக்டர் மனோஜ் ஷர்மா.
"எத்தனை மணி நேரம் ஒருவர் கணினியில் செலவிடுகிறார், எத்தனை மணி நேரம் வரை செலவிடுவது ஆரோக்கியமானது என்பதை நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் கண்டறியவுள்ளோம். எனினும் நமது புரிதலுக்காக சொல்ல வேண்டும் என்றால், இணையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அடங்கா ஆசை இருப்பவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். இணையத்தையோ அல்லது மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போதோ தங்களின் கட்டுப்பாட்டை அவர்கள் இழக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று கூறலாம். வெறும் பத்து நிமிடம் செலவிட நினைத்து இணையத்தில் சென்று மணிக் கணக்காக நேரம் செலவழிப்பவர்களும் இதில் அடங்குவர். எந்தத் தேவையும் இன்றி அவர்கள் இணையத்தில் நேரம் செலவிடுவதும் பிரச்சனைதான். இவர்களுக்கான சிகிச்சை முறையை நாங்கள் இன்னும் உருவாக்கி வருகிறோம். ஒருவரின் நடத்தைகள் அடிப்படையிலான சிகிச்சைகளை வழங்க முயற்சித்து வருகிறோம். ஊக்கத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை அளிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் அவரின் பிரச்சனை குறித்து அறிவுரை அளிப்போம். இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவருவதற்கான முடிவையும் நடவடிக்கையையும் அவர்களே மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பயிற்சி அளிப்போம். சலிப்பு தன்மை மிகுந்தவரகளுக்கு ஆர்வமான பொழுதுபோக்குகளை பழக உதவுவோம்" என்றார் டாக்டர் மனோஜ் ஷர்மா.


கட்டுரை: http://tamil.webdunia.com/

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews