வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவோம்.
சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.
கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.
இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?
நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.
இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம். நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.
கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.
புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.
இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.