|
வாழ்த்து செய்தியை வழக்கமான முறையில் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அசத்தலான அனிமேஷனில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. வொண்டர்சே என்னும் தளம் எதையுமே அனிமேஷனில் சொல்ல கைக்கொடுக்கிறது.
அதாவது இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ள விரும்பும் எந்த ஒரு வாசகத்தையும் இந்த தளத்தில் சமர்ப்பித்தால் அதனை அழகான அனிமேஷனாக மாற்றித்தருகிறது.
அனிமேஷன் என்றதும் கார்ட்டுன் சித்திரம் போல வண்ணமயமான தோற்றத்தை கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது வார்த்தை விளையாட்டின் வடிவம் போல வார்த்தைகளையே அனிமேஷனாக்கும் அழகான முறை. ‘ சில நேரங்களில் திரைப்படங்களில் பெயர் போடும் போது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு விதமாக வந்து போகும் அல்லவா?அதே போல இந்த சேவை நீங்கள் சமர்ப்பிக்கும் வாசகத்தில் உள்ள வார்த்தைகளை அனிமேஷன் முறையில் அங்கும் இங்கும் திரையில் தோன்றச்செய்து கவனத்தை ஈர்க்கிறது.
அதேபோல இமெயிலில் ஒற்றை வரியில் ஒரு விஷயத்தை சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை அப்படியே அனிமேஷன் தொடராக்கி அனுப்பி வைக்கலாம். இதே போல டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களையும் இங்கே சமர்ப்பித்து அதன் அனிமேஷன் வடிவை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
பொன்மொழி போன்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் மேதைகளின் மேற்கோள்களை இப்படி அனிமேஷனாக உயிரோட்டத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.
கொஞ்சம் விஷேசமான வாழ்த்து செய்தியை அனுப்பி வைக்கலாம்.இன்னும் எத்தனையோ வழிகளில் பயன்படுத்துக் கொள்ளலாம்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது பாடங்களை சுவாரஸ்யமாக்க இந்த வழியை பயன்படுத்தாலாம்.
இவ்வளவு ஏன் தினம் ஒரு திருக்குறளை அல்லது கம்பனின் காவிய வரிகளை இதில் பகிர்ந்து கொண்டு இலக்கியம் வளர்க்கலாம்.திரையில் தோன்றும் எழுத்துருவும் வண்ணங்களும் பிடிக்காவிட்டால் அவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் எதுவுமே வண்ணமயமாக இருந்தால் அதன் அழகே தனி தான்.அனிமேஷன் கலை இந்த வண்ணத்தை அளிக்ககூடும்.அனிமேஷன் தெரியாவிட்டாலும் அதனை பயன்படுத்திக் கொண்டு வார்த்தைகளுக்கும் வாசகங்களூக்கும் புது பொலிவு தர இந்த தளம் உதவுகிறது.
http://www.wondersay.com/ என்ற தளம் செல்லுங்கள்.
|
|
|