சாட் ரூம்ஸ் சில வழிகாட்டுதல்கள்
1. இன்டர்நெட் என்னும் போது நாம் சதிகாரர்களை அடையாளம்
காண்பது மிகவும் கடினம். நமக்குக் கிடைப்பதெல்லாம்
அவர்களின் இமெயில் முகவரியும் முகம் தெரியாத நபரும் அவரின் சர்க்கரை கலந்த பாலியியல் சொற்களுமே. எனவே உண்மையான நட்பு காரணமாக நீங்கள் அரட்டை அறைகளில் பேச விரும்பினாலும் உங்களுடைய உண்மையான பெயர், இமெயில் முகவரி, இருப்பிட முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரக் கூடாது.
2. உங்களுடைய வருமானம் போன்றவற்றைக் கேட்டுவிட்டு அதன்பின் நீங்கள் நாள்தோறும் பத்திரிக்கை படிப்பீர்களா என்ற சாதாரண தகவல்களைக் கேட்டுவிட்டு அதன் பின்னர் உங்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை இவர்கள் கேட்பார்கள். இதில் உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் பெர்சனல் தகவல்கள், வாழ்க்கை நடைமுறை இவற்றைப் பங்கிட்டுக் கொள்ளாதீர்கள். கடைந்தெடுத்த கிரிமினல் குற்றவாளிகள் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தி
நம்மை மாட்டி விடுவர்கள்.
3. சிறிது நாட்கள் சென்ற பின்னர் இவர்கள் நேரில் குறிப்பிட்ட இடத்திற்கு ஆசை காட்டி வரச் சொல்வார்கள். இதனைத் தவிர்க்கவும். உங்களுடைய அன்றாட வாழ்வும் இன்டர்நெட்டில் நீங்கள் காட்டும் வாழ்வும் வெவ்வேறாக
இருக்க வேண்டும். இரண்டையும் குழப்ப வேண்டாம். அப்படியே ஒரு துறை நண்பர் அரட்டை வழி கிடைத்து அவரைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கைக்கு, அல்லது வேலைகளுக்கு உதவியாய் இருப்பார் என்றால் பலர் கூடும் இடங்களில் உங்களின் உற்ற நண்பர்கள் மத்தியில் சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள். யாராவது தனியாக வா என்று ஆசை காட்டினால் உடனே அந்த பழக்கத்திற்கு முடிவு கட்டி விடுங்கள். உங்களை வீழ்த்த அங்கே பெரிய சதி உள்ளது என்பதின் ஆரம்பமே அது.
4. இது போன்ற அரட்டை அறைகளுக்கென யாரேனும் மாடரேட்டர் என்னும் ஒருங்கிணைப்பாளர் இருந்தால் அது போன்ற சாட் ரூம் களையே நாடுங்கள். இது முழுமையான பாதுகாப்பு இல்லை என்றாலும் ஓரளவிற்கு மூன்றாவது நபர் ஒருவருக்கு உங்கள் இருவரையும் தெரிகிறதல்லவா? இதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுகையில் சிக்கலைத் தீர்க்க உதவும். இருப்பினும் இது முழுமையான பாதுகாப்பு என்றும் கூற முடியாது. நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
5. சிலர் உங்களின் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத்தனமாக ஊடுருவுதலுக்கும் இந்த வழியைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் உங்களுக்கு ஆசை காட்டி இந்த இணைய தள முகவரியில் சென்றால் இதனைப் பார்க்கலாம். உடனடியாக லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுவார்கள். இப்படிப்பட்ட தளங்களைத் திறந்து பார்த்தால் நீங்கள் அறியாமலேயே வைரஸ் அல்லது மால்வேர் என்னும் திருட்டு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும். எனவே கவனமாக இருக்கவும். அல்லது அந்த தளங்களை எந்த கம்ப்யூட்டர் வழியாகத் திறப்பதையும் தவிர்க்கவும்.
6. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உங்கள் போட்டோ குறித்துத்தான். பழகிய கொஞ்சம் காலத்திலேயே உங்கள் போட்டோவை அனுப்புங்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே உங்களுக்கு அவர்களின் போட்டோவை அனுப்பி வைப்பார்கள். இதில் சிக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் அனுப்பிய போட்டோ வேறு ஒரு பெண் அல்லது ஆணின் போட்டோவாகக் கூட இருக்கலாம். அதே போல உங்கள் போட்டோவையும் தப்பான செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம். எனவே எந்த நிலையிலும் போட்டோவை அனுப்ப வேண்டாம்.
7. அப்படியானால் இன்டர்நெட் வழியில் சென்று அரட்டை அறைகளில் நண்பர்களைத் தேடவே கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம். தாராளமாக நண்பர்களைப் பெறலாம். ஆனால் சில எச்சரிக்கை வழிகளைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம் அல்லவா? அப்போ என்னதான் செய்யலாம் என்று கேட்கிறீர்களா! ஏற்கனவே உங்களுக்கு நேரில் பழக்கமான உற்ற நண்பர்கள் யார் மூலமாவது புதிய நண்பர்களைப் பழக்கிக் கொள்ளவும். நட்பின் பழக்கத்தை ஏன் மற்றவர்களிடம் மறைக்க வேண்டும். வீட்டில் உள்ள அண்ணன், அக்கா மற்றும் பெற்றோர்களிடம் இது பற்றிக் கூறவும். அவர்கள் நிச்சயம் இதில் உங்களை வழி நடத்துவார்கள். நல்ல நட்பாக இருந்தால் கை கொடுத்து உதவுவார்கள்.
அதே போல புதிய நண்பர்கள் கிடைத்தால் சற்று தூரத்தில் வைத்தே பழகுங்கள். ஒரே நாளில் உடனேயே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லிவிடாதீர்கள். எல்லாருக்கும் இந்த தீங்கு ஏற்படும் என்று இங்கு சொல்ல வரவில்லை. நாட்டில் இன்று நடக்கும் பாலியியல் மோசடிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் நாம் கவனமாக இருப்பது நல்லதல்லவா?