தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க
என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும்.
எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து இரண்டு மாதங்களாவது குறைந்தது கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கென வடிவமைக்கப்பட்ட பாடங்கள் உண்டு. இப்போது அந்த கவலையே இல்லை. இணையத்திலேயே இதற்கென டைப்ரைட்டிங் ட்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு ஒரு வாரத்தில் கீ போர்டைக் கையாளக் கற்றுக் கொள்ளலாம்.
அடுத்த நிலையில் அதனை வேகமாக இயக்க நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை அண்மையில் http://keybr.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் காண நேர்ந்தது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது.
நீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக் கொண்டு, வேகமாக டைப் அடிக்க பழக்கம் வேண்டும் எனில், அதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் தரப்படும் வேகத்தேர்வினை மேற்கொள்ளலாம்.
எவ்வளவு சரியாக டைப் செய்கிறீர்கள், எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்பதனைப் பட்டியல் போடுகிறது. உங்கள் டைப்பிங் வேகத்தினையும் வரைபடமாகக் காட்டுகிறது. சராசரியாக எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், உங்கள் வேகம் எப்படி எனப் படம் போடுகிறது.
மற்ற டைப்பிங் ட்யூட்டர் புரோகிராம்களில், நமக்குக் கற்றுக் கொடுக்க தாறுமாறாக எழுத்துக்கள் அமைந்த சொற்கள் தரப்படும். இதில் அவ்வாறின்றி, நல்ல டெக்ஸ்ட் தரப்படுகிறது. இதனால் நாம் ஆர்வம் பெற்று, சோதனைகளை மேற்கொள்கிறோம்.
இதனை இணைய தளத்தில் வைத்துத்தான் இயக்க முடியும். தனி புரோகிராமாக தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகளுக்குமான பாடங்களும் இருக்கின்றன.
அவை நமக்குத் தேவையில்லையே. சரி, இந்த தளத்தின் மூலம் நம் டைப்பிங் திறனை அதிகப்படுத்தத்தான் வேண்டுமா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
நம் தேடல் சொற்கள், உருவாக்கும் ஆவணங்கள் சரியாகவும், வேகமாகவும் அமைக்கப்பட வேண்டுமாயின், இது போன்ற சில பாடங்களும் சோதனைகளும் தேவை தான். ஒரு முறை இந்த தளம் சென்று பாருங்கள். நிச்சயம் உங்கள் டைப்பிங் திறன் கூர்மைப் படுத்தப்படும்.