தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, December 21, 2012

வியப்பூட்டும் முதல் கணினி


இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.
இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.
இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில்  அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி இந்த முதல் கணினி தன்னை நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.
பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இருவருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் நிஜம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews

65842