தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 8, 2014

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன?



இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது.

கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச்
சார்ந்தே உள்ளன.

இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது.



நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும்.

இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும்.

இணையத்தை மொத்தமாக அழிக்கும் வகையிலான சூழ்நிலைகளை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு வேளை இணையம் அழியும் என்றால், என்ன என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய திருக்கும்? நம் வாழ்வு,நாம் இணையத்திற்கு முன்னால் கொண்டிருந்த தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மீண்டும் தொடருமா? என்பதே இன்றைய சிந்தனைப் போக்காக அமைகிறது.

இணையம் இல்லாத வாழ்க்கை நமக்கு மிகவும் விநோதமாகத்தான் இருக்கும். மொபைல் போன் சேவை, அதன் மூலம் கிடைக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாற்றம் எல்லாம் என்னவாகும்? கேபிள் வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்றாலும், இணையம் சார்ந்த சாட்டலைட் வழி கிடைத்த தொடர்பு அறுந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்காதே?

பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பழங்கதை ஆகிவிடும். மீண்டும் ""அன்புள்ள அண்ணனுக்கு'' என போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுத வேண்டி இருக்கும். நம் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனுடக்குடன் அறிய முடியாது. சீமந்தம் குறித்த செய்தி கிடைக்கும் போது அங்கு குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் பைல்களை ஸ்டோர் செய்திடலாம். ஆனால், தொலைவில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எவ்வளவு நீளத்திற்கு கேபிள் இணைப்பு கொடுக்க முடியும்? கிரிட் கம்ப்யூட்டிங் முறையெல்லாம் இல்லாமல் போய், குழப்பமான கணக்கீடுகள் எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் போய், அறிவியல் ஆய்வுகள் தாமதமாகலாம்.

இணையம் இல்லாமல் போனால், பொருளாதாரச் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டும். எலக்ட்ரானிக் பேங்கிங் மறைந்து போய், செக்குகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். கூகுள் அல்லது அமேசான் போன்ற இன்டர்நெட் நிறுவனங்கள், சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும்.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் வர்த்தக இலக்குகளை கனவுகளாக எண்ணி அமைதியடைய வேண்டி வரும். கோடிக்கணக்கில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துவிடுவார்கள். பல கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இயங்கும் எல்லை தெரியாமல் மூடப்படும். ஒரு சில வகை வர்த்தகங்களே இன்டர்நெட் உதவியின்றி இயங்கும்.

அப்படியானால், இணையம் அழியும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்று ஒருவித பயம் கலந்த கேள்வி எழுகிறதா? இதற்கான பதில் நிச்சயமாய் இல்லை. இன்டர்நெட் என்பது ஆன்/ஆப் செய்யக் கூடிய ஸ்விட்ச் கொண்டு இயங்கும் மந்திரப்பெட்டி இல்லை. ஏதாவது ஒரு பிளக்கை இழுத்துவிட்டால், இயக்கம் இன்றி அணைந்துவிடக் கூடிய எலக்ட்ரானிக் சாதனம் இல்லை. இன்டர்நெட், பலவகையான சாதனங்கள் இயங்கும் ஒரு பெரிய வலைப்பின்னல்.


அது மட்டுமின்றி, நாள் தோறும், கணந்தோறும் அது தன்னை மாறுதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே உள்ளது. இன்டர்நெட்டின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டாலும், மற்ற பகுதிகளின் துணை கொண்டு அதனை சரி செய்திடும் வகையில் தான் இன்டர்நெட் இயங்கி வருகிறது. எனவே அர்த்த மற்ற பயம் இன்றி, இன்னும் அதனை வலுப்படுத்தும் முயற்சி யில் இறங்குவோம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews

65854