மொபைல் பழக்கங்கள்
மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.
இந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.
கீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.
கடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலை களில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.
பணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.
டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற்கொள்ள வேண்டாம்.
நிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயிருப்பவர் நீங்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.
மொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.
கழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.
சிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது.
நம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.
0 comments:
Post a Comment